சில முக்கியமான கேள்விகளுக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
" அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை, பல மொழிகள் கற்றுத் தரும் தனியார் பள்ளிகளில் திமுக தலைவர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? "
தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று பொய் கூறி, பல ஆண்டு காலமாகத் தமிழகத்தில் செய்து வரும் அதே மொழி அரசியலை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது திமுக. தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் புழக்கம், பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, அரசு ஊழியர்கள், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை என தனது ஒட்டு மொத்த நிர்வாகத் தோல்வியையும் மடைமாற்ற, ஹிந்தித் திணிப்பு என்ற மாயையை உருவாக்கி, அதன் பின்னர் ஒளிந்து கொள்கிறது.
திமுகவினர், தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நியாயம், தமிழக மக்களுக்கு ஒரு நியாயம் என, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து, அவர்கள் எதிர்காலம் நன்றாக இருப்பதை உறுதி செய்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான தவறான கருத்துக்களையும் பிரச்சாரத்தையும் பரப்புவார்கள்.
திமுகவின் இந்த போலியான மொழி அரசியலுக்குப் பலியானவர்கள் பெயர்களோ, அவர்கள் குடும்பங்கள் இப்போது எங்கே, எப்படி, என்ன நிலையில் இருக்கின்றன என்பதோ, முதலமைச்சருக்கோ, துணை முதலமைச்சருக்கோ தெரியுமா? திமுகவில் மேல்மட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் யாராவது ஒருவர் மொழிப் போர் தியாகி ஆகியிருக்கிறாரா? எத்தனை நாட்கள்தான் இப்படி அப்பாவிகளின் உணர்வைத் தூண்டி பலிகடா ஆக்கி, அந்த நெருப்பில் குளிர்காய்வீர்கள்?
திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஓடி ஒளியாமல், எங்களின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
திமுக அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை, தங்கள் குழந்தைகளை 3 மொழிகள் அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும்போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை?
திமுக தலைவர்களால் நடத்தப்படும் சிபிஎஸ்இ/மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், மாணவர்களுக்கு இந்தி, பிற இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது? கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் உரிமை, தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான குடும்பக் குழந்தைகளுக்கு மட்டுமேயான ஒரு உரிமையா?
பொதுமக்கள் வரிப்பணத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ. 44,000 கோடியை, பள்ளிக் கல்வித் துறைக்குச் செலவழித்துவிட்டு, பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம், கொள்கை எல்லாம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும்தான் என்ற திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது.